Wednesday 17 December 2014

என் கதை- 4: மண்டபம் முகாம் (இந்தியா)

இந்தியாவின் மண்டபம் முகாம் மிகவும் பிரசித்தி பெற்றது. இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழகத் தமிழர்களை தேயிலைத்தோட்டக் கூலிகளாக இலங்கைக்கு அழைத்து வருவதற்காக பிரிட்டிஷாரால் அமைக்கப்பட்ட இம்முகாம், பின்னர், ஈழப்போர் காலப்பகுதியில் இலங்கையிலிருந்து வரும் அகதிகளை தடுத்துவைக்கும் முகாமாக பிரபலமடைந்தது. 

இருந்தும், இடைப்பட்ட காலத்தில், இந்தியாவிலிருந்து இலங்கைக்கும், இலங்கையிலிருந்து இந்தியாவுக்கும் கடல்வழியாக வரும்/போகும் அனைவரும் தனுஷ்கோடி மண்டபம் முகாமினூடாகத்தான் செல்ல முடியும். பிரயாணிகள் மூலம் கொலரா போன்ற தொற்றுநோய்கள் நாட்டுக்குள் பரவாமல் தடுப்பதற்காக, இந்தியாவிலிருந்து பயணிக்கும் பிரயாணிகள் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டு, ஏழு நாட்கள் இந்த முகாமில் வைத்து அவதானிக்கப்பட்ட பின்னரே இலங்கை செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.


மண்டபம் முகாம் 350 ஏக்கர் விஸ்தீரணம் கொண்டது. இங்குள்ள ஒவ்வொரு ஊழியர்களுக்கும் தனித்தனி வீடுகள், இந்து முஸ்லீம் கிறித்தவ ஆலயங்கள், நீச்சல் குளங்கள், பாடசாலை, திறந்தவெளி அரங்கம் என சகல வசதிகளுடனும் இயங்கி வந்தது. இந்த முகாமுக்குள் எவரும் இலகுவில் உள்ளே செல்ல முடியாது.. அதற்கான காவல்காரர்கள் இரவுபகலாக கடமையில் இருப்பர். முகாமை கூட்டித் துப்பரவு செய்வதற்கென்றே முப்பதிற்கும் மேற்பட்ட ஆண் பெண் தொழிலாளர்கள் இருந்தனர். மேலும் கட்டங்களையும் வீடுகளையும் வீதிகளையும் பராமர்ப்பதற்கு PWT (Public Work Department) இன் ஓவர்சீயரும் (Overseer) வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்தார். பொதுவாகக் கூறினால், மண்டபம் முகாம் அக்காலத்தில், இந்தியாவில் ஒரு சிறு, தனி அரசாங்கம் போலவே செயற்பட்டு வந்தது.

இங்கே, இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருபவர்கள் மண்டபம் முகாமில் ரயில்வே ஸ்டேஷனில் இறக்கப்பட்டு, அவர்கள் தொற்றுநோய் தடுப்பூசி ஏற்றப்பட்டவர்களா என பரிசோதிக்கப்படுவார்கள். இலங்கைக்குள் நுழைவதற்கு அனுமதி பெற்றவர்கள் தனுஷ்கோடி துறைமுகத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். மற்றவர்கள் மண்டபத்தில் தடுக்கப்பட்டு, தடுப்பூசி ஏற்றப்பட்டு, குடிவரவு அனுமதி இல்லாதவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு, ஏழு நாட்கள் முடிவில் இலங்கைக்குப் போக அனுமதிக்கப்படுவார்கள்.

பிரயாணிகள் தங்கும் விடுதிகளும் அங்கே இருந்தன. இவ்விதமாக தங்குபவர்களுக்கு உணவு வசதிகள் அளிப்பதற்கு, ஒரு ஸ்தாபனம் ஒப்பந்தம் பெற்று அவர்களுக்கு சகல உணவுகளும் வழங்கி வந்தது. இம்முகாமில் வேலை செய்யும் இலங்கை ஊழியர்களுக்கு இலங்கை அரசாங்கம் வழங்கும் 155 இந்திய ரூபாய் சம்பளத்துடன் இந்திய அரசாங்கத்தால் 50 இந்திய ரூபாய் உபரியாக (போனஸ்) வழங்கப்படும். (ஒரு இந்திய ரூபாய் இரண்டு அல்லது மூன்று இலங்கை ரூபாய்க்கு சமனானது). இப்படியான அதிக சம்பளத்தின் காரணமாக, மண்டபம் முகாமிற்கு வேலைமாற்றம் பெற்று வேலை செய்வதற்கு ஊழியர்களிடையே கடும் போட்டியும் நிலவியது.


இந்த முகாமில் உள்ளவர்களின் சம்பளம் மற்றும் ஏனைய செலவுகளுக்கான பணம் இலங்கைத் திறைசேரியிலிருந்து இராமநாதபுரம் வங்கியில் வைப்பிலிடப்படும். அப்பணத்திலிருந்து இங்குள்ள ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படும். இவ்விதமாக இலங்கை திறைசேரியிலிருந்து வரும் பணத்தின் வரவு செலவுகளை மேற்பார்வை செய்வதற்காக இலங்கையிலிருந்து எழுதுவினைஞர் ஒருவர் அமர்த்தப்படுவார். இலங்கை பொது எழுதுவினைஞர் சேவையிலுள்ள ஒருவர் இதனைப் பொறுப்பேற்று, ஒவ்வொரு மாதமும் ஏற்படும் வரவு செலவுக் கணக்குகளை அட்டவணைப்படுத்தி இலங்கை திறைசேரிக்கு அனுப்புவார். 

--
தொடரும்

2 comments:

  1. அப்போது இலங்கை இந்தியாவை விட வசதி படைத்ததாக இருந்தது.இந்தியாவிலிருந்து இலங்கை வருவது லாபகரமாயிருந்தது.”கள்ளத்தோணி’ என்ற பெயர் கூட பிரபலமாயிருந்தது. இனவாதம் எல்லாவற்றையும் தலைகீழாக்கிவிட்டது

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்.. அதற்கு இரு இனங்களின் இனவாதங்களும் காரணம். இனவாதம் தலையெடுத்த நேரத்தில் ஊழல் போன்ற பெரிய பிரச்சனைகள் சத்தமில்லாமல் பரவிவிட்டன. தற்காலத்தில் இங்கே 'நாட்டில், ஊரில் என்ன நடந்தால் நமக்கென்ன?' எனும், பிரச்சனைகளுக்கு ஒதுங்கி வாழ முனையும் மனப்பாங்கு பரவலாக எல்லாரிடமும் (சிங்கள/தமிழ்/முஸ்லிம்) இருக்கிறது. இந்திய இலங்கை மக்களின் இயல்பே அப்படியான அடிமை மனநிலைதான் என்று நினைத்திருந்தேன்.

      ஆனால், நீங்கள் சொல்வதைப் பார்த்தால், ஒருகாலத்தில் இலங்கை ஜப்பானை விட வளமாக இருந்தது என சொல்லிக்கொள்வதைக் கவனித்தால், ஒருவேளை இனவாதமும் போரும்தான் மக்கள் மனதில் இருந்து உந்துசக்தியை அழித்து இப்படியான insecure feeling ஐ விதைத்துவிட்டனவா?

      Delete

Popular Posts