Monday 29 September 2014

என் கதை - 1: வீடும் பள்ளியும் (1929-1952) - UPDATED

எங்கள் குடும்பம் கமக்காரர் (விவசாயி) குடும்பம். அப்பு (அப்பா), ஆச்சி (அம்மா), நான்கு அக்காமார், மூன்று அண்ணன்மார், நான் மற்றும் ஒரு தம்பி என மொத்தம் பதினோரு அங்கத்தவர்கள். எங்களுக்கு இனசனம் (உறவினர்) அதிகம் இருந்தாலும் அவர்களுக்கு ஏனோ எங்களைப் பிடிப்பதில்லை. அப்புவும் ஆச்சியும் கல்வி கற்றதில்லை. அப்புவுக்கு கையெழுத்துப் போட மட்டும்தான் தெரியும். ஆச்சிக்கு அதுவும் தெரிந்திருக்கவில்லை. பிற்காலத்தில் நான் ஆச்சிக்கும் மூத்த அக்காவுக்கும் கையெழுத்து போட பழக்கினேன்.

நாங்கள் கமக்காரர்களாக இருந்தாலும் ஊரில் பிற கமக்காரர்களைப் போல ஓகோ என்று இல்லை. (யாழ்ப்பாணத்துச் சமூகக் கட்டமைப்பில் விவசாயிகளே அந்தஸ்திலும் பொருளாதாரத்திலும் பிறரைவிட உயர்ந்தவர்களாக மதிக்கப்பட்டார்கள்) காரணம், எங்கள் மூத்த அண்ணன்களின் படிப்புச் செலவுக்கென்று ஆச்சியின் சீதனத் (வரதட்சிணை) தோட்டக் காணிகளை அப்பு விற்று அண்ணனை ஒரு பயிற்றப்பட்ட ஆசிரியராக்கிவிட்டார். இது நடந்தது 1917-1918 ஆண்டுகளில். பயிற்சி முடிந்ததும் அண்ணர் வெளியூரில் தொழில் செய்யப் புறப்பட்டுவிட்டார். விடுமுறை நாட்களில் ஊருக்கு வந்தால் அவருக்கு இராசமரியாதைதான். அந்தக்காலத்தில் ஊரில் யாரும் அரசாங்கத்தில் தொழில் செய்யவில்லை என்பதே காரணம். “கோழி மேய்ச்சாலும் கோறனமேந்தில (கவர்மென்ட்டில) மேய்க்க வேணும் என்பது ஊரின் சொல்வழக்கு.

இருந்தாலும் பிறகு நடந்த சில குடும்பச சச்சரவுகளால் இரண்டு அக்கா, இரண்டு அண்ணா, அப்பு ஆச்சி, நான், தம்பி என குடும்பம் குறுகிவிட்டது. இப்படி இருந்துவரும்போது அப்புவுக்கு வயிற்றில் கட்டி ஒன்று வளர்ந்து அவர் மந்திகை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் தவறிவிட்டார். அதன்பின், குடும்பத்தின் வருமானத்துக்காக, ஆச்சி (என் அம்மா) காய்கறிகள் விளைவித்து விற்றுக்கொண்டிருந்தார். அவருக்கு பகுதிநேரமாக உதவியபடி நாங்கள் படித்துக்கொண்டிருந்தோம்.

வடமராட்சியில் நெல் போன்ற தானியங்களை பெரிய அளவில் விளைவிப்பதில்லை. மாறாக, ஆச்சி, காய்கறிகள், கிழங்குகள் போன்றவற்றை விளைவித்தும், மாடு, ஆடு, கோழி வளர்த்தும், சிறிய அளவில் தோட்டம் செய்தும் அவற்றை சேனா சந்தையில் (இப்பொழுது நெல்லியடி மார்க்கெட்) விற்று வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வருவர். அந்தக்காலத்தில் சந்தை பின்னேரம் நான்கு மணியில் இருந்து இரவு ஒன்பது மணி வரைக்கும் நடக்கும். சந்தையில் கடைகள் எதுவும் கிடையாது. ஒவ்வொரு வியாபாரியும் நிலத்தில் சாக்கு விரித்து, குப்பி விளக்கு வெளிச்சத்தில் பொருட்களை பரப்பி வைத்திருப்பர். அந்த நேரத்தில் தான், மீன்களும் பிடிக்கப்பட்டு சந்தைக்கு எடுத்து வரப்படும்

அந்தக்காலத்தில், காலை எழுந்ததும் மாடுகளில் பால் கறந்து தேநீர்க் கடைகளுக்கு விநியோகித்த பின்னர்தான் பள்ளிக்கூடம் செல்ல முடியும். பள்ளிக்கூடம் விட்டு வந்த உடனே மாடுகளுக்கு தீவனமான பனையோலைகளை எடுத்துவரவேண்டும். அதற்கென்று போய், காத்திருந்து எடுத்து வருவதற்குள் இரவு ஏழு மணியாகிவிடும். அந்த நேரத்தில்தான், பனையோலை தலையிலும், பாடங்கள் எழுதப்பட்ட கடதாசி கையிலுமாக   பள்ளிப் பாடத்தை மனனம் செய்துகொண்டே நடந்து வருவோம். இப்படியே தமிழ் வழியில் SSC (இன்றைய இலங்கையில் GCE O/L அல்லது இந்தியாவில் 10thக்கு சமமானது)  வரையில் படித்துவிட்டேன். இருந்தும் ஆங்கிலவழியில் படிக்க வேண்டும் என்பது என் கனவாகவே இருந்தது.

அப்பொழுது ஆங்கில பாடசாலையில் பணம் கட்டித்தான் படிக்க முடியும். எமது பெற்றோரின் எட்டுப்பிள்ளைகளுக்கும் பணம் செலுத்தி ஆங்கிலக்கல்வி தருவதற்கு எங்கள் குடும்பத்திடம் பணவசதி இருக்கவில்லை. ஆனால் அந்தக்காலத்தில் ஒரு குடும்பத்திலிருந்து ஆங்கிலக்கல்வி படிக்கும் முதல் பிள்ளைக்கு முழுத்தொகையும், இரண்டாவதாக படிக்கும் பிள்ளைக்கு அரைத்தொகையும் செலுத்தினால் மூன்றாவது பிள்ளை இலவசமாக கற்கக்கூடிய சலுகை காணப்பட்டது. இதன் காரணமாகவும், ஆங்கிலக்கல்வி படிக்கவேண்டும் என்ற எனது அவா இருந்ததாலும் நான் ஆங்கிலப்பள்ளியில் (Vathiri Sacred Heart College - வதிரி திரு இருதயக் கல்லூரி)  சேர்க்கப்பட்டேன்.

அந்தக் காலத்தில் தமிழ்வழி வகுப்புக்களில் ஆங்கிலப் பாடமானது  சிரத்தையாக சொல்லித் தரப்படுவதில்லை. ஆசிரியர்கள் ஏனோதானோவென்றுதான் படிப்பிப்பார்கள். நாமும் அவ்வாறுதான் படித்துக்கொண்டிருந்தோம்.

எனக்கு ஆங்கிலம் எதுவுமே புரியாத காரணத்தால், எனக்கு ஆறாம் ஆண்டிலிருந்து படிக்க விருப்பமில்லை. எனவே பாடசாலைக்குச் செல்ல மாட்டேன் என்று வீட்டில் அடம்பிடித்து அழுதேன். ஆச்சி மிகவும் கவலைப்பட்டு எனது மூன்றாவது அண்ணரிடம் (அவர் அப்போது ஆங்கிலவழி SSC படித்துக்கொண்டிருந்தார்) என் நிலைப்பாட்டைச் சொல்லி, குருவானவரிடம் பேசச்சொன்னார். அண்ணனும் குருவானவரிடம் போய் இவனை கீழ்வகுப்பில் சேர்த்தால் அவன் வேகமாகப் படித்து மற்றவர்களைவிட முன்னுக்கு வருவான்என்று உறுதியளித்தார். என்னைக் கவனித்த தலைமையாசிரியர் (Rev. Brother பாக்கியநாதர்), தனக்கு கீழிருந்த குருவானவரிடம் இவனை மூன்று மாதங்களுக்கு முதல் வகுப்பில் விடுவோம். பிறகு இவனது முன்னேற்றத்தைக் கவனித்து மேல்வகுப்புக்களில் சேர்க்கலாம் என்று சொல்லி என்னை முதலாம் தரத்தில் (Grade 1, இந்திய UKGக்கு சமமானது) சேர்த்தார். அப்போது எனக்கு வயது 18!

முதல் தவணையின் இறுதியில், நான் இரண்டாம் வகுப்பில் சேர்க்கப்பட்டேன். வருடமுடிவில் வகுப்பேற்றும் போது என்னை 6ம் வகுப்பு C பிரிவில் சேர்த்தனர். அந்த வருடம்தான் எனது தம்பியும் ஐந்தில் இருந்து ஆறாம் வகுப்பு A பிரிவிற்கு வகுப்பேற்றப்பட்டார். வருடமுடிவில் இருவரும் சித்தியடைந்து அடுத்த வருடம் ஏழாம் வகுப்பு A க்கு வகுப்பேற்றப்பட்டோம். அந்த வகுப்பிலிருந்து ஒவ்வொரு வருடமும் நாங்கள் வகுப்பேற்றப்பட்டு சிரேஷ்ட தராதர வகுப்பில் (SSC) இரண்டு வருட படிப்பை முடித்து பரீட்சைக்குத் தோற்றினோம். எங்களுடன் சேர்த்து 55 பொடியங்கள் அந்தப் பரீட்சைக்குத் தோற்றினோம். அவர்களில் ஆக ஆறு மாணவர்கள் தான் பூரண சித்தி எய்தினர். அந்த ஆறு பேரில் நானும் எனது தம்பியும் அடங்குவோம்


---------
தொடரும்


10 comments:

  1. அந்தக்காலத்தில் வசதி படைத்தவர்களால்தான் மருத்துவம் சட்டம் போன்றவற்றை கற்க முடிந்திருக்கிறது.
    ஆசிரியத்தொழில் அல்லது அரச உத்தியோகம் என்பவைதான் சாதாரணக்குடும்பத்துக்கனவுகள். பல்கலைக்கழப்படிப்பு இப்போதும் செலவு மிகுந்ததாய்த்தானிருக்கிறது

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் மாமா. ஆனால் இன்றைக்கும் யாழ்ப்பாணத்தில் குடும்பத்துக் கனவுகள் டாக்டர், இஞ்சினியர் என்பவற்றோடு மட்டுமே நின்றுவிடுகின்றன. பிள்ளை விரும்பிய பாடம் படிக்க வேண்டும் என பொதுவாக யாரும் நினைப்பதில்லை. வேறு எந்த வேலையுமே டாக்டர் இன்ஜினியருக்கு அடுத்ததாகத் தான் பார்க்கப்படுகின்றது. ஓவியம், இசை, எழுத்து, திரைப்படம் போன்ற கலைகளும் விளையாட்டுகளும் ஊக்குவிக்கப்படுவதில்லை.

      "Everybody is a Genius. But If You Judge a Fish by Its Ability to Climb a Tree, It Will Live Its Whole Life Believing that It is Stupid." இது இலங்கையின் மற்ற பகுதிகளில் குறிப்பிடத்த அளவு குறைவாக இருக்கிறது.

      Delete
    2. உண்மை தான் கிட்டு. அதனால் தான் என்னவோ பெற்றோர்கள் தமது கனவை தமது பிள்ளைகளின் மூலம் காண விரும்புகிறார்கள். நாமும் அதற்கு விதிவிலக்கு அல்ல, என்ன சேயோன் நான் சொல்லுவது சரிதானே,,,சேயோன் அருமையான வேலை செய்கிறாய்.. தொடரட்டும்...
      -ரூபி

      Delete
    3. பெற்றோரின் கனவை பிள்ளைகள் நிறைவேற்றவேண்டும் என எதிர்பார்ப்பதில் எனக்கு உடன்பாடில்லை சித்தா. :-)

      நன்றி நன்றி. ஒரே நாளில் பன்னிரண்டு மணித்தியாலம் கண் வலிக்க தட்டச்சிய, படம் வரைந்த, ஆறு பக்கங்கள் நீண்ட பதிவை ("துலா: பயன்பாடும் வடிவமைப்பும்") மதிப்புமிக்க, மாதமிருமுறை வெளிவரும் இணைய சஞ்சிகையான சொல்வனத்தில் (www.solvanam.com) பிரசுரிக்க தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். தாத்தாவுக்கு மிகப்பெரிய அங்கீகாரம்.

      Delete
    4. ஓம் ரூபி, :) வாழ்க்கை அஞ்சலோட்டம் போலத்தான்.பெரும்பாலும் பெற்றோர்களின் கனவு தங்கள் பிள்ளைகள் நன்றாக இருக்கவேண்டுமென்பதுதான்.

      சேயோன்: சொல்வனத்தில் வருவதையிட்டு மிக்க மகிழ்ச்சி.உழைப்புக்கு நன்றி.
      பிள்ளைகள் நன்றாக வாழ வேண்டுமென்ற பெற்றவர்களின் கனவை நிறைவேற்றவேண்டும் உங்களுக்குப்பிடித்தமான பாதையினூடாக :)

      Delete
  2. ஓவியம்,இசை எழுத்து ,திரைப்படம், இவற்றுக்கு பொருளாதார எதிர்காலம் இல்லை.பலர் ஓவிய ஆசிரியராகவோ,சங்கீத ஆசிரியராகவோதான் இருக்கிறார்கள்.you tube போன்ற வாசல்கள் உதவக்கூடும்.
    கலைகள் எமது கலாச்சாரத்துடன் சம்பந்தப்பட்டவை.
    அரசியலும் பொருளாதாரமும் சமூக மதிப்பீடும் அதில் தாக்கம் செய்கின்றன.
    தொழில், கல்வி சம்பந்தமான சமுகத்தின் நிலவும் பெறுமதி மதிப்பீடு, அரசியல் பொருளாதார அழுத்தங்களுக்கூடான பரிணாமத்தினூடாக ஏற்பட்ட நிலை.பாதுகாப்பற்ற மனநிலையின் விளைவு.
    இந்தப்பாதுகாப்பற்ற மனநிலை அற்றுப்போகும்போதுதான் நிலை மாறும்.
    genius,கெட்டித்தனம் பற்றிய உளவியல் பார்வைகள் மாறிவிட்டன.

    குழந்தைகளில் என்ன திறமை ஒளிந்திருக்கிறது என்று எப்படிக்கண்டுபிடிப்பது? how can one identify which is fish,or bird.
    மனிதமூளை விருப்பத்தோடு கூடிய பய்ற்சியின் மூலம் ஒரு திறமையை வளர்த்துக்கொள்ளக்கூடியது
    பிறக்கும்போதே ஆற்றலோடு பிறப்பது என்பது அவர்களுடைய மூளையில் அந்தப்பகுதி விருத்தியடைந்தபடியே பிறப்பது.
    அவர்களுக்கு இயல்பாக ஒரு துறை நன்றாகவரும்.ஆனால் அந்தத்துறையில் விருப்பம் வரவில்லையென்றால் அந்தப்பகுதி தேய்ந்துவிடும்.ஆனால் விருப்பமுள்ள இன்னொருவர் பயிற்சியின் மூலம் மூளையின் அதே பகுதியை விருத்தியடையச்செய்யக்கூடும்.
    ஒருவர் மனதில் ஒரு துறையில் விருப்பம் ஏற்படுவது என்பதுதான் அடிப்படையில் fish/bird ஐ தீர்மானிக்கிறது. ஒரு துறையில் விருப்பம் ஏற்படுவதற்கு எங்கள் சூழல் காரணமாக அமைகிறது.இன்றைய தலைமுறையின் விருப்பங்களை தீர்மானிப்பதில் மீடியா,சினிமா,இண்டர்னெட் எனப்பல வந்துவிட்டன.மாயமானை துரத்திக்கொண்டோடுகிற நிலை ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம்.அதனால்
    பெற்றோர்களின் வழிகாட்டல் அத்தியாவசியமாகிறது.பெற்றோர்கள் reality ஐ சொல்பவர்களாக இருக்கவேண்டும். அவர்களும் மாயமானைத்துரத்தக்கூடும்,சிக்கல்... அதனால்தான் அனேகர் சமூகத்தோடு ஓடுகிறார்கள்.
    அதேவேளை
    நான் ஒரு fish /நான் ஒரு bird என மட்டுப்படுத்திக்கொள்வதும் மனம் எதிர்கொள்ளும் பெருஞ்சிக்கல்.(fixed mindset/growth mindset).
    ஒரு ஆழமான விஷயம்.

    ReplyDelete
  3. //பாதுகாப்பற்ற மனநிலையின் விளைவு//

    மிகவும் உண்மை. இந்த மனநிலைதான் பெற்றோரை பொதுவாக ஆட்டுவிக்கிறது.

    சிறுவயதில் ஒரு துறையைப்பற்றி கேள்விப்படுவதற்கோ, அதில் விருப்பத்தை சுயமாக உண்டாக்குவதற்கோ, நான் யார் என அறிந்துகொள்வதற்கோ நல்ல வாசிப்புப் பழக்கம் முக்கியம். உயிரியலில், உடலின் பாகங்களின் complexity ஐயும், அவை ஒருசேர தொழிற்படும் விதம்பற்றியும், இவையெல்லாம் பரிணாமப் படிகளில் தானாகவே தோன்றிய அதிசயம் பற்றியும் ஆர்வம் விரிய வேண்டும். அதுபோலவே பொறியியலையும், an art / puzzle of building என பார்க்கும் பார்வை வந்துவிட்டால் துறையில் உண்மையான விருப்பம், காதல் வந்துவிடும் என நினைக்கிறேன். அதைவிட்டு, இவற்றை வெறும் பணம் கொழிக்கும் தொழில்களாக பார்க்கும் மனப்பான்மையும், நான் டாக்டராகினால் மட்டுமே குடும்பத்தை கரைசேர்க்க முடியும் என்ற மன அழுத்தமும் மட்டுமே இத்துறைகளில் வெற்றிபெற போதுமானவையாக இருக்கமுடியாது அல்லவா?

    மதிப்பெண்களைத் துரத்தும் இக்காலத்தில் பாடப்புத்தகங்களை விட்டு வெளியே வாசிப்பது ஊக்குவிக்கப்படுவதில்லை. சிறுவர்கள் மொழிகளை சரியாக கையாள்வதற்கான ஒரே வழி பரந்த வாசிப்பு, அவதானிப்பு, விவாதம் போன்றவற்றை அவர்களிடையே ஊக்குவிப்பதுதான் என்பதை அறிந்தாலும், அதைவிட்டு தமது பிள்ளைக்கு தாய்மொழியில் மதிப்பெண்கள் வரவில்லை என ட்யூஷனுக்கு அனுப்பும் பெற்றோரை கண்கூடாக பார்த்திருக்கிறேன். இது உணவின் காய்கறிகளை எறிந்துவிட்டு வைட்டமின் மாத்திரைகளை மட்டும் சாப்பிட முனைவது போன்ற முட்டாள்தனம் இல்லையா?

    ReplyDelete
    Replies
    1. //பாதுகாப்பற்ற மனநிலையின் விளைவு//

      அப்படியே யோசித்தால்கூட அனைவருமே டாக்டருக்கும் இஞ்சினியருக்கும் ஆசைப்படுவதால் அத்தொழில்களுக்கு போட்டி மிக அதிகமாக இருக்கிறது. பொறியியற் கல்லூரிக்குப் போகும் எத்தனைபேர் எதிர்பார்த்தளவு உயர்ந்த சம்பளத்தைப் பெற்றுக்கொள்கிறார்கள்? மற்றவர்களின் கதி என்ன? மருத்துவத்தை மட்டுமே எதிர்பார்த்து, பல்கலையில் உயிரியல் கிடைத்தவுடன் பலர் விரக்தியடைந்து அந்தப் பாடத்தையும்கூட சரியாகப் படிக்காமல் போகிறார்கள் என்று பேராசிரியர் ஒருவர் கூறினார். அதே உயிரியலை விருப்பத்தோடு படித்து, Food Science போன்ற துறைகளில் டாக்டர்களை விட அதிக சம்பளம் கிடைக்கும், போட்டியே இல்லாத வேளைகளில் தெரிந்தவர்கள் இருக்கிறார்கள்.

      எனவே, பெற்றோரும் மாணவர்களும் கண்ணை மூடிக்கொண்டு சில துறைகளை மட்டும் துரத்துவதைத் தவிர்க்க பாடத்தேர்வு, வேலைவாய்ப்பு, சம்பளம் போன்றவற்றுக்கான விழிப்புணர்வு விஷயம் தெரிந்தவர்களால் ஏற்படுத்தப்பட வேண்டும்.

      Delete
  4. அப்பா உங்களின் எழுத்து மிகவும் அருமை. நீங்கள் எதையும் மறக்கவில்லை. பனை ஓலை தலையிலும் பாடத்துண்டு கையிலுமாக நீங்கள் வேலை செய்த படி படித்ததை நான் இன்றும் ஹரிக்கு சொல்லுகிறனான்.
    -ரூபி

    ReplyDelete
    Replies
    1. சித்தா, (முதல்முறை?!) தமிழில் எழுதியிருக்கிறீர்கள்... அருமை.

      அந்த விஷயத்தை தாத்தா எழுத மறந்துவிட்டார். அதை அவர் முன்பே எனக்கு சொல்லியிருந்த நினைவிலிருந்து இடைச்சொருகலாக எழுதி இணைத்தேன். எழுதும்போது "மாடுமேய்துக்கொண்டே மனனம் செய்தோம்" என்று எழுதிவிட்டேன். பதிப்பிக்குமுன் படித்துப் பார்த்தவர் "நான் எங்கே மாடு மேய்த்தேன்? மாட்டுக்கு பனையோலைதான் கொண்டுவந்தேன்" என்று கடுப்பாகிவிட்டார். பிறகு, ஆளை அமைதிப்படுத்தி, வசனத்தை மாற்றி எழுதி பதிப்பிக்க வேண்டியதாகிவிட்டது. :-)

      Delete

Popular Posts