Monday 29 September 2014

என் கதை - 1: வீடும் பள்ளியும் (1929-1952) - UPDATED

எங்கள் குடும்பம் கமக்காரர் (விவசாயி) குடும்பம். அப்பு (அப்பா), ஆச்சி (அம்மா), நான்கு அக்காமார், மூன்று அண்ணன்மார், நான் மற்றும் ஒரு தம்பி என மொத்தம் பதினோரு அங்கத்தவர்கள். எங்களுக்கு இனசனம் (உறவினர்) அதிகம் இருந்தாலும் அவர்களுக்கு ஏனோ எங்களைப் பிடிப்பதில்லை. அப்புவும் ஆச்சியும் கல்வி கற்றதில்லை. அப்புவுக்கு கையெழுத்துப் போட மட்டும்தான் தெரியும். ஆச்சிக்கு அதுவும் தெரிந்திருக்கவில்லை. பிற்காலத்தில் நான் ஆச்சிக்கும் மூத்த அக்காவுக்கும் கையெழுத்து போட பழக்கினேன்.

நாங்கள் கமக்காரர்களாக இருந்தாலும் ஊரில் பிற கமக்காரர்களைப் போல ஓகோ என்று இல்லை. (யாழ்ப்பாணத்துச் சமூகக் கட்டமைப்பில் விவசாயிகளே அந்தஸ்திலும் பொருளாதாரத்திலும் பிறரைவிட உயர்ந்தவர்களாக மதிக்கப்பட்டார்கள்) காரணம், எங்கள் மூத்த அண்ணன்களின் படிப்புச் செலவுக்கென்று ஆச்சியின் சீதனத் (வரதட்சிணை) தோட்டக் காணிகளை அப்பு விற்று அண்ணனை ஒரு பயிற்றப்பட்ட ஆசிரியராக்கிவிட்டார். இது நடந்தது 1917-1918 ஆண்டுகளில். பயிற்சி முடிந்ததும் அண்ணர் வெளியூரில் தொழில் செய்யப் புறப்பட்டுவிட்டார். விடுமுறை நாட்களில் ஊருக்கு வந்தால் அவருக்கு இராசமரியாதைதான். அந்தக்காலத்தில் ஊரில் யாரும் அரசாங்கத்தில் தொழில் செய்யவில்லை என்பதே காரணம். “கோழி மேய்ச்சாலும் கோறனமேந்தில (கவர்மென்ட்டில) மேய்க்க வேணும் என்பது ஊரின் சொல்வழக்கு.

இருந்தாலும் பிறகு நடந்த சில குடும்பச சச்சரவுகளால் இரண்டு அக்கா, இரண்டு அண்ணா, அப்பு ஆச்சி, நான், தம்பி என குடும்பம் குறுகிவிட்டது. இப்படி இருந்துவரும்போது அப்புவுக்கு வயிற்றில் கட்டி ஒன்று வளர்ந்து அவர் மந்திகை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் தவறிவிட்டார். அதன்பின், குடும்பத்தின் வருமானத்துக்காக, ஆச்சி (என் அம்மா) காய்கறிகள் விளைவித்து விற்றுக்கொண்டிருந்தார். அவருக்கு பகுதிநேரமாக உதவியபடி நாங்கள் படித்துக்கொண்டிருந்தோம்.

வடமராட்சியில் நெல் போன்ற தானியங்களை பெரிய அளவில் விளைவிப்பதில்லை. மாறாக, ஆச்சி, காய்கறிகள், கிழங்குகள் போன்றவற்றை விளைவித்தும், மாடு, ஆடு, கோழி வளர்த்தும், சிறிய அளவில் தோட்டம் செய்தும் அவற்றை சேனா சந்தையில் (இப்பொழுது நெல்லியடி மார்க்கெட்) விற்று வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வருவர். அந்தக்காலத்தில் சந்தை பின்னேரம் நான்கு மணியில் இருந்து இரவு ஒன்பது மணி வரைக்கும் நடக்கும். சந்தையில் கடைகள் எதுவும் கிடையாது. ஒவ்வொரு வியாபாரியும் நிலத்தில் சாக்கு விரித்து, குப்பி விளக்கு வெளிச்சத்தில் பொருட்களை பரப்பி வைத்திருப்பர். அந்த நேரத்தில் தான், மீன்களும் பிடிக்கப்பட்டு சந்தைக்கு எடுத்து வரப்படும்

அந்தக்காலத்தில், காலை எழுந்ததும் மாடுகளில் பால் கறந்து தேநீர்க் கடைகளுக்கு விநியோகித்த பின்னர்தான் பள்ளிக்கூடம் செல்ல முடியும். பள்ளிக்கூடம் விட்டு வந்த உடனே மாடுகளுக்கு தீவனமான பனையோலைகளை எடுத்துவரவேண்டும். அதற்கென்று போய், காத்திருந்து எடுத்து வருவதற்குள் இரவு ஏழு மணியாகிவிடும். அந்த நேரத்தில்தான், பனையோலை தலையிலும், பாடங்கள் எழுதப்பட்ட கடதாசி கையிலுமாக   பள்ளிப் பாடத்தை மனனம் செய்துகொண்டே நடந்து வருவோம். இப்படியே தமிழ் வழியில் SSC (இன்றைய இலங்கையில் GCE O/L அல்லது இந்தியாவில் 10thக்கு சமமானது)  வரையில் படித்துவிட்டேன். இருந்தும் ஆங்கிலவழியில் படிக்க வேண்டும் என்பது என் கனவாகவே இருந்தது.

அப்பொழுது ஆங்கில பாடசாலையில் பணம் கட்டித்தான் படிக்க முடியும். எமது பெற்றோரின் எட்டுப்பிள்ளைகளுக்கும் பணம் செலுத்தி ஆங்கிலக்கல்வி தருவதற்கு எங்கள் குடும்பத்திடம் பணவசதி இருக்கவில்லை. ஆனால் அந்தக்காலத்தில் ஒரு குடும்பத்திலிருந்து ஆங்கிலக்கல்வி படிக்கும் முதல் பிள்ளைக்கு முழுத்தொகையும், இரண்டாவதாக படிக்கும் பிள்ளைக்கு அரைத்தொகையும் செலுத்தினால் மூன்றாவது பிள்ளை இலவசமாக கற்கக்கூடிய சலுகை காணப்பட்டது. இதன் காரணமாகவும், ஆங்கிலக்கல்வி படிக்கவேண்டும் என்ற எனது அவா இருந்ததாலும் நான் ஆங்கிலப்பள்ளியில் (Vathiri Sacred Heart College - வதிரி திரு இருதயக் கல்லூரி)  சேர்க்கப்பட்டேன்.

அந்தக் காலத்தில் தமிழ்வழி வகுப்புக்களில் ஆங்கிலப் பாடமானது  சிரத்தையாக சொல்லித் தரப்படுவதில்லை. ஆசிரியர்கள் ஏனோதானோவென்றுதான் படிப்பிப்பார்கள். நாமும் அவ்வாறுதான் படித்துக்கொண்டிருந்தோம்.

எனக்கு ஆங்கிலம் எதுவுமே புரியாத காரணத்தால், எனக்கு ஆறாம் ஆண்டிலிருந்து படிக்க விருப்பமில்லை. எனவே பாடசாலைக்குச் செல்ல மாட்டேன் என்று வீட்டில் அடம்பிடித்து அழுதேன். ஆச்சி மிகவும் கவலைப்பட்டு எனது மூன்றாவது அண்ணரிடம் (அவர் அப்போது ஆங்கிலவழி SSC படித்துக்கொண்டிருந்தார்) என் நிலைப்பாட்டைச் சொல்லி, குருவானவரிடம் பேசச்சொன்னார். அண்ணனும் குருவானவரிடம் போய் இவனை கீழ்வகுப்பில் சேர்த்தால் அவன் வேகமாகப் படித்து மற்றவர்களைவிட முன்னுக்கு வருவான்என்று உறுதியளித்தார். என்னைக் கவனித்த தலைமையாசிரியர் (Rev. Brother பாக்கியநாதர்), தனக்கு கீழிருந்த குருவானவரிடம் இவனை மூன்று மாதங்களுக்கு முதல் வகுப்பில் விடுவோம். பிறகு இவனது முன்னேற்றத்தைக் கவனித்து மேல்வகுப்புக்களில் சேர்க்கலாம் என்று சொல்லி என்னை முதலாம் தரத்தில் (Grade 1, இந்திய UKGக்கு சமமானது) சேர்த்தார். அப்போது எனக்கு வயது 18!

முதல் தவணையின் இறுதியில், நான் இரண்டாம் வகுப்பில் சேர்க்கப்பட்டேன். வருடமுடிவில் வகுப்பேற்றும் போது என்னை 6ம் வகுப்பு C பிரிவில் சேர்த்தனர். அந்த வருடம்தான் எனது தம்பியும் ஐந்தில் இருந்து ஆறாம் வகுப்பு A பிரிவிற்கு வகுப்பேற்றப்பட்டார். வருடமுடிவில் இருவரும் சித்தியடைந்து அடுத்த வருடம் ஏழாம் வகுப்பு A க்கு வகுப்பேற்றப்பட்டோம். அந்த வகுப்பிலிருந்து ஒவ்வொரு வருடமும் நாங்கள் வகுப்பேற்றப்பட்டு சிரேஷ்ட தராதர வகுப்பில் (SSC) இரண்டு வருட படிப்பை முடித்து பரீட்சைக்குத் தோற்றினோம். எங்களுடன் சேர்த்து 55 பொடியங்கள் அந்தப் பரீட்சைக்குத் தோற்றினோம். அவர்களில் ஆக ஆறு மாணவர்கள் தான் பூரண சித்தி எய்தினர். அந்த ஆறு பேரில் நானும் எனது தம்பியும் அடங்குவோம்


---------
தொடரும்


Wednesday 17 September 2014

வடமராட்சியில் ஒரு வைரவர் கோயில்



எனது முதல் பதிவை எங்களது குலக் கோயிலைப் பற்றி எழுதுவதன் மூலம் மங்களகரமாக ஆரம்பிக்கின்றேன்.


இந்தியாவின் தென்கோடியில் வங்கக்கடலாலும் இந்து சமுத்திரத்தாலும் சூழப்பட்ட தீவு ஈழமாகும். இதை இலங்கைத் தீவு என்றும் அழைப்பார்கள். இத்தீவின் வடக்கே தலையாக யாழ்ப்பாணப் பட்டினம் அமைந்திருக்கின்றது. இற்றைக்கு ஐந்நூறு வருடங்களுக்கு முன் இந்தியாவில் உள்ள வேதாரண்யம் எனும் பகுதியிலிருந்து வந்து யாழ்ப்பாணத்திலுள்ள வடமராட்சி என்ற பகுதியில் குடியேறியவர்களின் பரம்பரையில் வந்தவர்தான் இராமர் ஆறுமுகம் என்பவர். அவர் கமத்தொழிலையே பிரதானமாகக் கொண்டு வாழ்ந்துகொண்டிருந்தார். அவ்வூரில் அக்காலத்தில் (பத்தொன்பதாம் நூற்றாண்டில்) தெய்வ வழிபாடு செய்வதற்கென தனது காணிக்குள் ஒரு கல்லை நட்டு ஆராதனை செய்து வணங்கி வந்தார். சில வருடங்களின் பின் அக் கல் நட்ட இடத்தில் ஒரு ஆயில் மரக்கன்று ஒன்று மரமாக வளர்ந்தது. இதை அறிந்த அக்கிராமத்தவர்கள் அம்மரத்தையும் இணைத்து பயபக்தியுடன் வணங்கி விசேஷ காலங்களில் பொங்கல் பூசை வழிபாடுகள் செய்து வந்தனர்.

இவ்வாறு சில வருடங்கள் கழிந்தன. வெய்யில் கொளுத்தும் பங்குனி மாதத்தில் ஒருநாள் ஆறுமுகத்தார் வெக்கை தாங்க முடியாமல், அந்த ஆயில் மர நிழலில் படுத்து சிறிது நேரம் நித்திரை செய்தார். அச்சமயம் அவரது கனவில் ஒரு வயது முதிர்ந்த பெண் கையில் ஒரு திரிசூலத்துடன் தோன்றி அச்சூலத்தை ஆறுமுகத்தாரிடம் கொடுத்து அதை வைத்து ஆராதிக்கச் சொல்லிவிட்டு மறைந்துவிட்டார். இக்கனவை கேள்விப்பட்ட அவரது வீட்டார் “கனவில் வந்து அருள் செய்தது தில்லைக் காளியம்மனேதான். எனவே தில்லையம்மனுக்கு ஒரு கொட்டில் அமைத்து வழிபடவேண்டும் என்று முடிவெடுத்தனர். ஆறுமுகத்தார் கொட்டில் அமைப்பதற்கு குழிதொண்டும்போது அங்கு ஒரு திரிசூலம் சுயம்புவாக வெளிப்பட்டது. இதை அறிந்த ஊர்மக்கள் இது தெய்வ செயல்தான் என நம்பி அவ்விடத்தில் பனைமரங்களினாலும் பனை ஒலையாலும் ஒரு கொட்டில் அமைத்து, அந்தத் திரிசூலத்தை அக்கொட்டிலில் நட்டு வெள்ளி செவ்வாய் கிழமைகளில் ஆராதித்து வந்தனர்.

இப்படிவரும் காலத்தில் ஒருநாள் அடைமழையும் புயல் காற்றும் அடித்ததால் கொட்டில் விழுந்துவிட்டது. இதைக்கண்ட ஊரவர்கள் கிராமத்திற்கு ஒரு கோயில் வேண்டுமென சொல்லி ஆறுமுகத்தார் தலைமையில் ஒரு கோயில் கட்டி அதில் அந்தத் திருசூலத்தை வைத்து ஆராதிக்க முடிவு செய்தனர். விளைவாக, சுண்ணாம்பாலும் கல்லாலும் ஒரு கோவில் 1930 களில் அவ்விடத்தில் கட்டப்பட்டு, திரிசூலம் அங்கே வைக்கப்பட்டது. இக்கோவிலில் விசேஷ நாட்களில் ஆகம முறைப்படி பூசை செய்வதற்காகவும் கிராமத்தில் நடைபெறும் திவசம் (சிரார்த்தம்) மற்றும் நற்கருமங்களை செய்யவும் ஒரு பிராமணக் குருக்கள் தேவைப்பட்டார். இந்தியாவின் வேதாரண்யத்தில் வசித்து வரும் ஆறுமுகத்தாரின் சொந்தக்காரர்கள், இதற்காக, அங்குள்ள ஒரு பிராமண குடும்பத்தை யாழ்ப்பாணம் அனுப்பி வைத்தனர். ஆறுமுகத்தார் வடமராட்சியில் அக்குடும்பத்துக்கு ஓர் உறைவிடம் அமைத்துக் கொடுக்க, மேற்படி கோயிலில் நிரந்தரமாகத் தங்கிய பிராமணக் குருக்கள் பூசை புனஸ்காரங்கள் முதலிய கருமங்களை செய்து வந்தார்.

இவ்வாறாக சில வருடங்களின் பின் ஆறுமுகத்தார் இறைபதம் எய்தினார். அதன்பின் அவரது மக்கள் மூவரும் பெண்கள் என்றபடியால் ஊர் மக்களைக் கூட்டி “ஊருக்கொரு ஒழுங்கான கோவில் இல்லை. எனவே இக்கோவிலை ஊர் மக்கள் தான் பராமரிக்க வேண்டும் என்று ஊர் மக்களிடம் ஒப்படைத்தனர். அப்பொழுது மலாயாவில் சண்முகம் சின்னாச்சி என்பவர் சகல வசதிகளுடனும் (இவருக்குச் சொந்தமாக வெள்ளி, துத்தநாக சுரங்கங்கள்கூட இருந்தன)  வாழ்ந்து வந்தார். அவர் கோயில் பொறுப்பை தனது தம்பியிடம் ஒப்படைத்தார்.

அவர் சுண்ணாம்புக் கலவையால் முறையான கோயில் கட்டிடமும் சுற்று மதிலும் கட்டி பொழிகல்லால் கிணறும் கட்டுவித்து காண்டாமணியும் கோபுரமும் அமைத்து, பூசைகளை கிரமமாக நடத்த வழிசெய்தார். இக்காலத்திலே கோயிலில் மூலவராக இருந்த திரிசூலத்தை எடுத்துவிட்டு கருங்கல்லினால் ஆன வைரவரை மூலவராக அமைத்தன் மூலம் இந்த தில்லையம்மன் கோயில் ‘சக்கலாவத்தை வைரவர் கோயிலாகமாற்றமடைந்து புதுப்பொலிவு பெற்றது. வைரவருக்கு கோயில் அமைத்தவுடன் பிள்ளையாருக்கும் ஒரு கோயில் அமைக்கவேண்டி இருந்தது. இதனை இக்கிராமத்தில் வசித்த பிள்ளைமார் குடும்பம் பொறுப்பேற்று, ஒரு கோயில் அமைத்து அதில் பிள்ளையாரையும் பிரதிஷ்டை செய்தனர்.

தற்பொழுது அயற்கிராமங்களில் எல்லாம் கோயில்கள் எழுந்த போதிலும் சக்காலாவத்தை வைரவர் கோயிலே பழமையும் முதன்மையும் பெறுகின்றது. இன்று கோயில் நிர்வாகம் ஒரு நிர்வாக சபை மூலம் நடத்தப்பட்டாலும் கோவில் மாதாந்தப் பூசைகளை (12 மாதம்) ஆறுமுகத்தாரின் வாரிசுகளும் பிள்ளைமார் குடும்ப அங்கத்தவர்களும் நடத்தி வருகின்றனர். மேலும் ஆவணி மாதத்தில் வரும் பூர்வபட்ச பஞ்சமி திதியில் இருந்து பத்து நாட்களுக்கு அலங்காரத் திருவிழாவும் பத்தாம் நாள் அன்னதானமும் சீராக நடைபெற்று வருகின்றது.

இன்று ஒழுங்கைக்கொரு கோயில்கள் இக்கிராமத்தில் வெளிநாட்டும் பணத்தால் புதுப்பொலிவு பெற்று விளங்கினாலும் இக்கிராமத்தவர்கள் இந்த வைரவர் கோயிலை இன்றும் பயபக்தியுடன் ஆராத்தித்து வருகிறார்கள். வைரவரும் அவர்களுக்கு நல்வாழ்க்கை அளித்து வருகின்றார்.  

யாழ் வரைபடத்தில் கோயில்:

Popular Posts